பழனி மலையும், எடப்பாடி காவடியின் சிறப்பும் !!

lord edappadi murugan

'இன்னைக்கு ராத்திரி முழுவதும் பழநிமலை எங்களுக்குச் சொந்தம்' - எடப்பாடி மக்களின் பக்தி பிரவேசம் ...!!!

பழநி மலை முருகன் கோயிலில் யாருக்கும் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. யார் மலையேறினாலும் முருகப் பெருமானைத் தரிசித்ததும் கீழிறங்கிவிட வேண்டும். அதுதான் நியதி. ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி நகரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தைப்பூசத்துக்குப் பிறகு, ஒரு நாள் பழநி மலைக் கோயிலில் இரவு தங்கி வழிபடுகிறார்கள். யாருக்குமே இல்லாத உரிமை இவர்களுக்கு எப்படி வந்தது? 

‘வள்ளி மகள் எங்களது குலத்தில் பிறந்தவள். வள்ளியைத் திருமணம் செய்துகொண்டதால் முருகன் எங்கள் மருமகன். எங்கள்  மருமகனுக்கு வருடாவருடம் தைப்பூசம் முடிந்ததும் சீர் கொண்டு வருகிறோம்’ என்று உரிமையுடன் கூறுகிறார்கள் எடப்பாடி மக்கள். 

எடப்பாடி நகர மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகத் திரண்டு தைப்பூசத்துக்குப் பிறகு, ஒரு நாள் ஆடிப்பாடிக் கொண்டாடியபடி பழநிக்கு வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பிறகு அந்த நாள் முழுவதும் கோயில் அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அன்று இரவு முழுவதும் அவர்கள் மலையிலேயே தங்கிக் கொண்டாடுகிறார்கள். 

இதுகுறித்து விசாரித்தோம். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களைக் நகரத்தினர் பகிர்ந்துகொண்டனர்.

`பழநி மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும் எடப்பாடி நகர மக்கள் பாதயாத்திரைக்கான கங்கணம் கட்டி, விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாலின வித்தியாசம் இல்லாமல் ஒட்டுமொத்த நகரமே விரதமிருப்பர். பழநி ஆண்டவரைத் தரிசித்து, வீடு வந்து சேர்ந்ததும் படையல் போட்டப் பிறகுதான் அவர்களின் விரதம் நிறைவு பெறும். இடைப்பட்ட நாள்களில் முருகனுக்குப் படையல் போடுவதற்கு முன்பு பச்சைத் தண்ணீரைக்கூடக் குடிக்க மாட்டார்கள். அந்தளவுக்குப் பக்தியுடன் விரதம் இருந்து தன் மருமகனை வழிபடுவார்கள் எடப்பாடி மக்கள்.

எடப்பாடி, பழநி மலை முருகன்

பழநிக்கான பாதயாத்திரைக்கு முன்பு எடப்பாடியே விழாக்கோலம் பூணும். பழநி மலை முருகன் கோயிலைப் போன்றே மாதிரிக் கோயிலைப் பெரும் பொருள்செலவில் அமைத்து பெருவிழா எடுப்பார்கள். எடப்பாடியில் பூஜை நடைபெறும்போது பழநி மலையிலிருக்கும் முருகன் எடப்பாடிக்கு வந்துவிடுகிறானாம். எடப்பாடி மக்களின் பாதயாத்திரையின்போது அவர்களுடன் முருகனும் சேர்ந்து பயணிப்பதாகவும் நம்பிக்கை.

ஆயிரக்கணக்கான எடப்பாடி மக்கள் சர்க்கரைக் காவடி, கரும்புக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என்று விதவிதமான காவடியெடுத்து பெருங்கொண்டாட்டத்துடன் பழநி மலை முருகனை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். இவர்கள் தமது காவடியை அலங்கரிக்க ‘பனாங்கு’ என்ற கைவேலைப்பாடுகள் நிறைந்த பட்டுத் துணியைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிலர் மச்சக்காவடி எடுத்து ஆடி வருவார்கள். முருகனின் உத்தரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களால் மட்டுமே மச்சக்காவடியை எடுக்க முடியுமாம்.

எடப்பாடி மக்கள் நகரம்

காவடி எடுத்தவர்கள் போக மற்றவர்கள் முருகன்மீது ‘கோலாட்டப் பாடல்’களைப் பாடியபடி வருவார்கள். இவர்களின் ஆட்டத்தில் நாலாம் நாடி, எட்டாம் நாடி, சென்னி மலை கொட்டு என்று பலவிதமான கொட்டுகள் இடம்பெறும். 

எடப்பாடி பக்தர்களின் தனிச்சிறப்பு, ‘குடையாட்டம்.’ இது பழங்காலந்தொட்டே முருகனுக்கு உரிய ஆட்டம். ஆட்டம் பாட்டத்துடன் பழநிமலை நோக்கி வரும் எடப்பாடி மக்கள் வரும் வழிகளில் பூஜை மற்றும் அன்னதானங்களைச் செய்து வருகிறார்கள். பழநியை அடைந்ததும் ‘படி பூஜை’ செய்வர். அதைத் தொடர்ந்து மலை ஏறியதும் கோயிலில் வெளிப் பிராகாரத்தில் ‘ஓம்’ என்று மலர் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். இவர்களது கூட்டு வழிபாடான ‘விபூதி படைத்தல்’ நிகழ்வு சிறப்பு மிக்கது. 

ஒவ்வொருவரும் சுமார் இரண்டு கிலோ அளவிலான விபூதியைக் குவித்து, அதில் கால் கிலோ அளவுக்குக் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி, பிறகு தேங்காய் உடைத்து முருகனை வழிபடுவார்கள். தேங்காய் உடைக்கும்போது எடப்பாடி மக்கள் ‘அரோகரா’ என்று பக்திப் பரவசத்துடன் எழுப்பும் சத்தம் மலையடிவாரம் வரைக் கேட்கும். அந்த விபூதியை வீடுகளுக்குக் கொண்டு சென்று பூசிக்கொள்வார்கள். 

கோயிலில் இரவு தங்கும்போது அவர்கள் முருகனுக்குப் படைக்கும் பஞ்சாமிர்தத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்கின்றனர். இதற்காக மலையேறும்போதே மூட்டை மூட்டையாகச் சர்க்கரை, மலைவாழைப்பழம் ஆகியவற்றைக் கொண்டு செல்வார்கள். அதை முருகனுக்குப் படைத்துவிட்டு, பக்தர்களுக்கு அதைப் பிரசாதமாக வழங்கிவிடுவார்கள். 

பழநி, எடப்பாடி நகர மக்கள்

முருகனுக்கும் எடப்பாடி மக்களுக்குமான பிணைப்புக் கதைகள் பல உண்டு. 

“நாங்க பலநூறு வருசமாவே பழநி மலை முருகன வழிபட்டு வர்றோம். முருகன், பெத்தவங்க மேல கோபப்பட்டு பழநி மலைக்கு வரும் வழில அவருக்குப் பசி எடுத்துது. அப்போ வழில ஒரு தோட்டத்துல நெறைய பொண்ணுங்க தினை அறுவடை செஞ்சிகிட்டு இருந்தாங்க. அவுங்ககிட்ட முருகன் சாப்பாடு கேட்டிருக்காரு.

 ‘பண்ணைக்காரர் திட்டுவார்’னு சொல்லி யாரும் அவருக்கு உணவு கொடுக்கல. ஆனா, அங்க வேலை செஞ்ச ஒரு பொண்ணு மட்டும் முருகனுக்குத் தினை கொடுத்தா. அத வாங்கிச் சாப்பிட்டாரு முருகன். இதைக் கேள்விப்பட்ட பண்ணைக்காரரு அந்தப் பொண்ண வேலையவிட்டு அனுப்பிட்டாரு. கூலியையும் கொடுக்கல. அந்தப் பொண்ணு அழத் தொடங்கிட்டா. இதைப் பார்த்த முருகன், அந்தப் பொண்ணையும் தன்கூட பழநிக்கு அழைச்சுக்கிட்டு வந்து மணம் முடிச்சிட்டாரு. அந்தப் பெண்தான் எங்க ஊரு வள்ளி. வள்ளி எங்க வீட்டு மக. முருகன் எங்க ஊரு மருமகன். முருகனுக்கு சீர் கொண்டு வர்றது எங்களோட உரிமை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் எடபாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர்.

“மலைக்கோயில் பெரிய தேர் ஒருசமயம் குழில சிக்கிக்கிச்சு. யார் இழுத்தும் தேர் நகரல. யானையக்கூட கட்டி இழுத்தாங்க. ம்ம்ம்கூம்... தேர் ஒரு இன்ச்கூட நகரலையாம். அப்போ எங்க ஊரு மக்கள் இழுத்தபோதுதான் தேர் நகர்ந்துச்சாம். அதைப் பார்த்த மன்னர் எங்களுக்கு ‘செப்புப் பட்டயம்’ ஒண்ணு கொடுத்தாரு. அந்தப் பட்டயம் மூலம்தான் நாங்க மலைக்கோயில்ல தங்கறதுக்கு உரிமை பெற்றோம். 

நாங்க மலைல தங்கறப்போ ராக்காவலர்கள தவிர, வேறு யாரும் இருக்க மாட்டாங்க. முருகனுக்கு செய்யற பூஜையக்கூட நாங்களே செஞ்சிக்குவோம். முருகன் சந்நிதிக்கு முன்னாடி எங்க பிரச்னைகள் எல்லாத்தையும் பேசித் தீர்த்துக்குவோம். ராத்திரி பட்டிமன்றம், பாட்டு, கச்சேரினு கொண்டாட்டம் தூள் கிளப்பும். இங்கேருந்து எடுத்துட்டுப் போற விபூதியைத்தான் நாங்க பூசுவோம். உடம்பு சரி இல்லாட்டி இந்தத்  திருநீற்றைப்  பூசுனா போதும், எங்களோட மருமகன் அருளால எல்லா வியாதிகளும் சிட்டா பறந்துபோகும். பழநி முருகன்தான் எங்களோட குலதெய்வம். அவர கடவுளா பார்க்கறதவிடவும் எங்க மருமகனா பார்க்கறதுலதான் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார் ! 

Yes
Salem
mettur
omalur
attur

This website is not responsible for any personal loss

Terms and conditions Privacy Policy